Tuesday, 30 November 2010

உணர்வுகள் - ஒரு தொகுப்பு.

அம்மா
********
உயிர்வரை சேரும் உன் ஒருபிடி சோறு வேண்டுமம்மா!
இங்கே அமுதமே கிடைத்தாலும்,
ஒவ்வொருமுறை உண்ணும்போதும்,
உன் உணவிற்காக ஏங்குகிறேன்!

தங்கை
********
எவ்வளவு துக்கம் தொண்டையை அடைத்தாலும்,
அதில் உன் நகைச்சுவை உணர்வை கலந்து
அதனை ஒன்றுமில்லாமல் செய்வாயே,
இன்று நான் எதற்காகவென்று தெரியாமலேயே அழுதுகொண்டிருக்கிறேன்.
என்னை சிரிக்க வைக்க, நீ அருகில் இல்லாமல்
எனக்கு எப்படி அழுகையை நிருத்துவதேன்றே தெரியவில்லை....

அவள் கூற்று உண்மைதான்
******************************
'எம்புள்ளய பதினாறு வயசுலேயே கட்டி குடுத்திட்டேன், அது சிரிச்சிகிட்டே மாமியார் வீட்டுக்கு போச்சு, நீ என்ன ராஜிகண்ணு படிச்சி வேளைக்கு போன புள்ள, இவ்வளவு வயசாச்சு, இன்னமும் உனக்கு வயசுக்கேத்த தெம்பு வரலையே' -- என் மாமியார் வீடு செல்லும்போது நான் கலங்கியிருந்ததை உணர்ந்த என் அத்தையின் கூற்று ... உண்மை தான்.. என் மனம் இன்னமும் அழுகிறது, 'நான் அம்மா கிட்ட போகணும்'.

அப்பா
*******
ஒருவர் நம்மை திட்டிக்கொண்டே இருந்தாலும்,
அவர் பேசுவது நம் காதில் விழாதது போல்,
கீழே குனிந்துகொண்டு, ஒரு உணர்ச்சியில்லாத முகத்தைகொண்டிருக்கும் அந்த இனிமையை நான் உணர்ந்து பலநாட்கள் ஆயிற்று.....

இயற்கை
**********
மேகங்களுக்குள் இன்று மோகம் அதிகமாயிற்று.
அதிகமாக தம்முள் உரசிக்கொண்டு
வியர்வை மழை பொழிகின்றன,
இலைகளை முற்றிலும் உதிர்த்துவிட்டு
பிரிவில் புலம்பிக்கொண்டிருந்த மரக்கிளைகளும் காம்புகளும்
அந்த துளிகளை தங்களுள் கோத்துக்கொண்டன!
மணிகள் கோத்த அந்த காம்புகளை
அவள் தன் கழுத்தினில் அணிந்திட ஆசை கொண்டாள்!
ஏதோ ஏக்கத்தில் அவள் கண்களில் கோத்த மணிகள்
அவள் கன்னங்களின் வழியே உருண்டோடின.
எந்த சோகத்திலும் இயற்கை மீதான காதல் மட்டும்,
மீண்டும் மீண்டும் பூத்துக்கொண்டேதான் இருக்கின்றது

Sunday, 29 November 2009

மௌனம் பேசியவை!

அவள் எப்படி என்று என்னிடம் யாராவது கேட்டால் நான் எங்கிருந்து ஆரம்பிப்பது?

என்னையே நான் முற்றிலும் அறியாத நிலையில் இறைவன் படைத்த இன்னொரு பாத்திரத்தை பற்றி நான் விமர்சனம் செய்வதா?

சரி ஞானக்கண் திறந்து நான்கு வார்த்தை அவளை பற்றி சொல்லவா?
என் friendu நல்லவ வல்லவ நாலும் தெரிஞ்சவ..

* ஒரு கூட்டு குடும்பத்தில வளர்ந்ததால வயதுக்கு மீறின பொறுமை அவளிடம் இருக்கும். அதுக்காக குறும்புத்தனம் பண்ணாமலாம் இருக்க மாட்டாள். வாலுத்தனம் இருக்கத்தான் செய்யும்.(point to be noted)

* எந்த கலையையும் அவளால் ரசிக்க முடியும். அவள் ஒரு நல்ல ரசிகை.

* முற்றிலும் அமைதியாக இருக்கும் அவள் முகத்தில் சட்டென்று வந்து செல்லும் உணர்வு வெளிபாடுகள், அவளை முழுவதுமாக வெளிப்படுத்தும். Romba Romba Romba expressive :)

* அலுவலக வேலையை கூட அவள் தன் முழுமனதையும் ஒப்புவித்து செய்வாள்.

* ஒரே ஒரு முறைதான் என்னிடம் அவள் தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளால். நாங்கள் இருவரும் நாங்கரை வருடங்களாக பழகி வருகிறோம். :) கோபத்தை வெளிப்படுத்தும் RATIO Romba Romba குறைவு.

* அவள் தன்னை பற்றி என்னிடம் எதுவும் சொல்வதிலை என்கிற எண்ணம் எனக்குள் வந்ததுண்டு, அவள் மௌனத்தை உணரும் நிலை என்னிடம் வந்தபின் அந்த எண்ணம் மறைந்துதான் போனது.

அவளை அறிந்துகொள்ள சில வருடங்காளாவது காத்திருக்கதான் வேண்டும்!!!

Monday, 19 October 2009

வண்ணத்துப்பூச்சிகள்

இறைவன் உலகை படைத்துவிட்டு
அதற்கு வர்ணம் பூசிக்கொண்டிருந்தான்.
அப்போது வண்ண பூச்சு
பல இடங்களில் சிந்திக்கிடந்தது.
அந்த துளிகளுக்கும் உயிர்க்கொடுக்க எண்ணிய இறைவன்
அவற்றுக்கு சிறகையும் கொடுத்து பறக்கச் செய்தான்.

Monday, 24 November 2008

புல்லாங்குழல்

யாரோ ஊதுவதனால் குழலில் உறங்கிக்கொண்டிருந்த காற்று,
அழுத்தம் தாங்காமல் அந்த குழலின் கண்கள் வழியே
கொட்டிசெல்லும் வேதனைதான் நம்மை ரசிக்க வைக்கும் இசையாகிப்போகிறது!

இப்போதெல்லாம் புல்லாங்குழல் தான் என்னுடைய பொழுதுபோக்கு. எழுத நினைத்தால் ஒன்றும் நினைவுக்கு வருவதில்லை.

அதுசரி, எல்லாரும் எப்படி இருக்கீங்க?!

Sunday, 24 August 2008

அந்த இயற்கையோடு நான்!



சமீபத்தில் கேரளம் சென்றிருந்தோம். அங்கே அதிரம்பள்ளி நீர்விழிசியின் அருகே நான் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது!


கேரளம் செல்வதற்காக எல்லோரும் தொடர்வண்டி நிலையத்திற்குள் வேகமாக சென்றுகொண்டிருந்தோம். அப்போது ஒருத்தி, அவள் என் ரயில் ஸ்னேகிதி, என் தோள்களில் கைவைத்து "How is newly married life?" என்றாள். எனக்கு அவள் பெயர் ஞாபகம் இல்லை. சிரித்துக்கொண்டே அவளை பார்த்து உங்களிடம் எனக்கு திருமணமாகிவிட்டதென்று யார் சொன்னார்கள் என்று கேட்டேன். அவள், 'உங்களை பார்த்தாலே தெரிகிறதே' என்றாள். அப்படி என்ன தெரிகிறதென்றேன். எங்கள் அலுவலக அடையாள அட்டை நிறம் மஞ்சள். அதை பார்த்துவிட்டு அவள் இப்படி எனக்கு திருமணமாகிவிட்டதென்று நினைத்திருக்கிறாள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று அவளிடம் சொல்லிவிட்டு, நாங்கள் சுற்றுலா செல்வதையும் அவளிடம் சொல்லிவிட்டு, என் பயணத்தை தொடர்ந்தேன். அவள் பெயர் தான் இன்றும் எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லை.

Tuesday, 20 May 2008

நினைவுகள்..










எங்கள் வீட்டின் கண்ணாடி ஜன்னலுக்கு பின்னால் இருந்து எடுத்த புகைப்படங்கள் இவை. அந்த சிறுவன் இப்படி விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து எனக்கும் அதே போல் விளையாட ஆசையாக இருந்தது. சிறிது நேரத்தில் அவனுடைய தோழர்களும் தோழிகளும் அங்கு குவிந்து விட்டனர். எல்லோரும் இதே போல் சில அட்டைகளைக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தனர். வெகு நேர யோசனைக்கு பிறகு நானும் களமிரங்கினேன். அங்கிருந்த ஒரு சிறுவனிடம் "என்னையும் சேர்த்துகொள்கிறீர்களா" என்று கேட்டேன். நான் எதிர்பார்க்காத அளவு உற்சாகத்துடன் அவன் "கண்டிப்பாக" (sure) என்றான். இந்த புகைப்படத்தில் இருக்கும் அதே அட்டையில் நான் உட்கார்ந்துகொண்டேன். அவன் லேசாக அந்த அட்டையை தள்ளிவிட்டான், நான் சறுக்கிக்கொண்டு ஒரு மூளையில் போய் சேர்ந்தேன்.. நல்ல அனுபவம்.. லேசாக கெட்டியாகியிருந்த அந்த பனிச்சருக்கு பயணமும் மறக்கமுடியாததுதான்!

Monday, 5 May 2008

சிந்திக்க மட்டும்

அந்த செடியின் அருகிலேயே அந்த உதிர்ந்த பூ, தன் செடியை பிரிந்த பின்பும் அதன் ஸ்பரிசத்தில் தன் மீத நேரத்தை இன்பமாய் கழித்துகொண்டிருக்கிறது!

அந்த பூவிடம் இந்த பிரிவை நீ உணர்கிறாயா?
நீ இன்றோடு இறந்துபோவாய், அது உனக்கு தெரியுமா?
என்று சில கேள்விகள் கேட்க தோன்றியது..

அதனுள் இந்த சில கேள்விகள் இன்னும் எழாமல் இருக்கலாம்!
அமைதியான அந்த பூவுக்குள் கேள்விகள் என்கிற விஷத்தை செலுத்த விருப்பமில்லாமல்
அவிடத்தை விட்டு நகர்ந்தோம்...