Tuesday, 30 November 2010

உணர்வுகள் - ஒரு தொகுப்பு.

அம்மா
********
உயிர்வரை சேரும் உன் ஒருபிடி சோறு வேண்டுமம்மா!
இங்கே அமுதமே கிடைத்தாலும்,
ஒவ்வொருமுறை உண்ணும்போதும்,
உன் உணவிற்காக ஏங்குகிறேன்!

தங்கை
********
எவ்வளவு துக்கம் தொண்டையை அடைத்தாலும்,
அதில் உன் நகைச்சுவை உணர்வை கலந்து
அதனை ஒன்றுமில்லாமல் செய்வாயே,
இன்று நான் எதற்காகவென்று தெரியாமலேயே அழுதுகொண்டிருக்கிறேன்.
என்னை சிரிக்க வைக்க, நீ அருகில் இல்லாமல்
எனக்கு எப்படி அழுகையை நிருத்துவதேன்றே தெரியவில்லை....

அவள் கூற்று உண்மைதான்
******************************
'எம்புள்ளய பதினாறு வயசுலேயே கட்டி குடுத்திட்டேன், அது சிரிச்சிகிட்டே மாமியார் வீட்டுக்கு போச்சு, நீ என்ன ராஜிகண்ணு படிச்சி வேளைக்கு போன புள்ள, இவ்வளவு வயசாச்சு, இன்னமும் உனக்கு வயசுக்கேத்த தெம்பு வரலையே' -- என் மாமியார் வீடு செல்லும்போது நான் கலங்கியிருந்ததை உணர்ந்த என் அத்தையின் கூற்று ... உண்மை தான்.. என் மனம் இன்னமும் அழுகிறது, 'நான் அம்மா கிட்ட போகணும்'.

அப்பா
*******
ஒருவர் நம்மை திட்டிக்கொண்டே இருந்தாலும்,
அவர் பேசுவது நம் காதில் விழாதது போல்,
கீழே குனிந்துகொண்டு, ஒரு உணர்ச்சியில்லாத முகத்தைகொண்டிருக்கும் அந்த இனிமையை நான் உணர்ந்து பலநாட்கள் ஆயிற்று.....

இயற்கை
**********
மேகங்களுக்குள் இன்று மோகம் அதிகமாயிற்று.
அதிகமாக தம்முள் உரசிக்கொண்டு
வியர்வை மழை பொழிகின்றன,
இலைகளை முற்றிலும் உதிர்த்துவிட்டு
பிரிவில் புலம்பிக்கொண்டிருந்த மரக்கிளைகளும் காம்புகளும்
அந்த துளிகளை தங்களுள் கோத்துக்கொண்டன!
மணிகள் கோத்த அந்த காம்புகளை
அவள் தன் கழுத்தினில் அணிந்திட ஆசை கொண்டாள்!
ஏதோ ஏக்கத்தில் அவள் கண்களில் கோத்த மணிகள்
அவள் கன்னங்களின் வழியே உருண்டோடின.
எந்த சோகத்திலும் இயற்கை மீதான காதல் மட்டும்,
மீண்டும் மீண்டும் பூத்துக்கொண்டேதான் இருக்கின்றது